ஃபார்முலா ஒன் - நியூர்ன்பேர்க்
நேற்று ஜெர்மனியின் நியூர்ன்பேர்கில் நடந்த ரேஸ் மிக்க பரபரப்பாக இருந்தது. நேற்றய ரேஸை பார்த்திருந்தால், எஃப் - 1 விளையாட்டின் பெரும்பாலான சூட்சுமங்களை புரிந்திருக்கலாம்.
மொத்த வீரர்கள் 22. ரேஸின் போல் பொஸிஸன் இப்படியாக இருந்தது - ரேகனன்(1), அலோன்சோ(2), மாஸா(3), வெபர்(6), ரால்ஃப்(9) ஹாமில்டன்(10). ரேஸ் துவங்கும் போதே, 2 நிமிடத்தில் மழை வரப்போவதாக கணிக்கபட்டது. ரேஸ் தொடங்கி முதல் சுற்றிலேயே சாரல் விழத் தொடங்க, ஓடுதளம் ஈரமாக்கபட்டது. அனைத்து வண்டிகளும் ஈர டயர் மாற்றிகொள்ள பிற்றை நோக்கி சென்றன, ஒரே ஒருவரை தவிர.அவர் விங்கெல்ஹாக். அறிமுக ஆட்டக்காரரான இவர் சமயோசிதமாக செயல்பட்டு, ரேஸ் தொடங்கும் முன்பே ஈர டயருக்கு மாறிவிட்டார். அதனால் அவர் சுமார் 7 நொடிகளை சேமித்து முன்னால் சென்று கொண்டிருந்தார். ஈர டயருக்கு மாறிய பிற வண்டிகள், அவரை பின் தொடர்ந்தன. இப்படியே இரு சுற்றுகள் முடிய, மூன்றாவது சுற்றில் காத்திருந்தது ஆப்பு.
ஒரு வளைவில் மழை தண்ணீர் தேங்கி நின்றதால், வேகமாக வந்த வண்டிகள் ஓடுத்தளத்திலிருந்து சறுக்கிய படி வெளியே பாய்ந்தன. இதில் ஹாமில்டனும் சறுக்கினார். அனுபவ வீரர்கள் அந்த வளைவில் மெதுவாக வந்ததால் தப்பி முன்னேறினர்.
மழை நீரால் சறுக்கி வெளியே பாய்ந்த வண்டிகள்.
ஓடுதளம் சேதமானதால், சேஃப்டி கார் உள்ளே அழைக்கபட்டது. சேஃப்டி கார் தளத்தில் ஓடும் போது, அதையோ பிற வண்டிகளையோ முந்த கூடாது. ஆனால் தன் முன் செல்லும் வண்டிக்கும் தனக்கும் உள்ள லீட் தூரத்தை குறைத்து கொள்ள இது அரிய வாய்ப்பு.
ஸேஃப்டி கார்
சேஃப்டி கார் முன்னே செல்ல, விங்கெல்ஹாக் தொடர, மற்ற வண்டிகள் பின் தொடர்ந்தன. ஹாமில்டன் கிரேன் மூலம் தூக்கப்பட்டு, ஓடுதளத்தில் விடப்பட்டார். பிற சறுக்கிய வண்டிகள் ரேஸிலிருந்து வெளியேறின.
இப்போது 17 வண்டிகளே தளத்தில் உள்ளன. ஹாமில்டன் தான் கடைசி. சேஃப்டி கார், இரு சுற்றுகளை முடித்து விட்டு வெளியேற, ரேஸ் விட்ட இடத்திலிருந்து தொடங்கியது. ஓரிரு சுற்றுகள் முடிந்ததும், மழை நின்று தளம் காயத் தொடங்கியது. அந்தோ பரிதாபம், ஈர டயர் மாட்டியிருந்த வண்டிகள் காய்ந்த டயர் மாட்ட மீண்டும் பிற்றுக்கு சென்றன.
இப்போதய நிலை மாஸா(1), அலோன்சோ(2), வெபர்(3), ரேகனன்(14), ஹாமில்டன்(17).
லாப் 19-ல் ஒரு வளைவில் ரால்ஃபின் வண்டி மற்றொரு வண்டியுடன் உரசி ஒதுங்கியது. சொந்த மண்ணில் ரேஸ் முடிக்காமல் வெளியேறியது துரதிர்ஷ்டமே.
ரால்ஃபின் துரதிர்ஷ்டம்.
ரேகனன் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற, 35-வது லாப்பில் இஞ்சின் பழுதடைந்து வெளியேறினார். ஹாட்ரிக் வாய்ப்பையும் தவற விட்டார்.
இப்படியே ரேஸ் போய்க்கொண்டிருக்க, ஹாமில்டன் மெதுவாக முன்னேறி 10-வது இடத்திற்கு வந்தார். 10 லாப்புகள் எஞ்சியிருக்க, மழையும் ரேசில் சேர்ந்தது. ஈர டயர் மாற்றிகொள்ள மீண்டும் பிற்றுக்கு சென்றன் வண்டிகள். மழை நீர் தேக்கத்தால், மாஸாவின் ஃபெராரி வண்டியை விடவும் அலோன்சோவின் மெக்லாரன் வண்டி வேகமாக சென்றது. இதனால் அலோன்சோவின் கை ஓங்கியது. அது வரை முன்னே சென்று கொண்டிருந்த, மாஸாவை ஒரு வளைவில் வைத்து முந்தினார்.
மாஸாவை முந்தும் அலோன்சோ
கடைசியில் பெய்த மழையே மாஸாவுக்கும் ஃபெராரிக்கும் எமனாக அமைந்தது.தொடர்ந்து 9 முறை போடியத்தில் நின்ற ஹாமில்டன், இம்முறை ஒரு புள்ளி கூட பெற முடியாமல் போனது.
அலோன்சோ முதலிடத்தை பிடிக்க, மாஸா இரண்டாமிடமும் ரெட் புல் அணியின் வெபர் மூன்றாமிடமும் வந்தார்கள்.
ஈரோ சாம்பியன் அலோன்சோ
No comments:
Post a Comment